46வது கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் நேற்று(11) கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 10 ஆம் திகதி மெய்வல்லுனர் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி .எம். எல். பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இறுதிநாள் விருது வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி. எல்.பெர்ணான்டோ கலந்து சிறப்பித்தார்.
இவ்விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜே.ரக்சயா சிறந்த சுவட்டு வீராங்கனையாகவும் , அம்பாறை மாவட்டத்தின் எம் .எச் .சபீர்அலி சிறந்த சுவட்டு வீரராகவும், ஈட்டி எறிதலில் பங்குபற்றிய அம்பாறை மாவட்டத்தின் டி. எம் .ஐ.ஹசந்தி சிறந்த மைதான நிகழ்ச்சிக்குறிய வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
மேலும், நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய திருகோணமலை மாவட்டத்தின் ஏ.ஆபித் சிறந்த மைதான நிகழ்ச்சிக்குறிய வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் எம்.எச்.சபீர் அலி நாற்பத்தி ஆறாவது கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியின் அதி திறமைவாய்ந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் ,பெண்களுக்குரிய மெய்வல்லுனர் போட்டியில் இரண்டாம் இடத்தை அம்பாறை மாவட்டமும் முதலாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் ,ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் திருகோணமலை மாவட்டம் இரண்டாம் இடத்தையும் அம்பாறை மாவட்டம் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
ஒட்டுமொத்த மெய்வல்லுனர் போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் இம்முறை சம்பியனாக முதலாம் இடத்தை அம்பாறை மாவட்டமும் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என். எம். நெளபீஸ் , திணைக்கள தலைவர்கள்,நடுவர்கள் ,பயிற்சியாளர்கள் ,மூன்று மாவட்டங்களின் வீர வீராங்கனைகளும் கலந்து சிறப்பித்தனர்.