நாட்டை கடன் பொறியில் தள்ளிய பொறுப்பில் இருந்து மஹிந்த விலகி விட முடியாது! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாடு தற்போது சிக்கியுள்ள கடன் பொறியில் நாட்டை தள்ளிவிட்டவர் மகிந்த ராஜபக்ச எனவும் அதற்கான பொறுப்பில் இருந்து அவர் விலகி விட முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருக்காவிட்டால், தற்போதும் நாட்டிற்குள் வழமையான பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்ல கூடியதாக இருந்திருக்கும்.

2005 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த கடன் 2,222 பில்லியன் ரூபாய். இந்த கடனுடன் வணிக கடன்களை பெற்று நாட்டை பொருளாதார ரீதியாக அதள பாதாளத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பித்தவர் மகிந்த ராஜபக்ச.

அவரது சகாக்கள் தற்போது என்ன கூறினாலும் அவரால் இதில் இருந்து விலகிச் செல்ல முடியாது. நாட்டின் கடன் பொறியில் தள்ளியமைக்கான பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஏற்றே ஆக வேண்டும்.

மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களில் பலன்கள் கிடைக்கவில்லை.

தாமரை கோபுரம், சூரியவௌ கிரிக்கெட் விளையாட்டு மைதானம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற வருமானம் பெற முடியாத திட்டங்களை உருவாக்கி நாட்டை கடனாளியாக்கினார்.

எவ்வித வருமானமும் கிடைக்காத திட்டங்கள் ஊடாக அரசியல் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டதால், நாடு தற்போது கடனில் சிக்கியுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எவராலும் தீர்வை தேட முடியாதுள்ளது. கோட்டாபய ராஜபக்ச எந்தளவுக்கு முயற்சித்தாலும் அதனை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *