இலங்கை மக்களை இந்தியா கைவிடாது. எனவே இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் நிதியை பெறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பது குறித்து தம்மிடம் வாதிடாமல், நாளை அமைச்சரவைக்கு சென்று அங்கு வாதிடுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கான காலம் தற்போது கடந்துவிட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ஜனாதிபதி செயலாளரும் திறைசேரியின் செயலாளரும் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான யோசனைகள் முன்வைக்கபட்டன.
அன்றே நாணய நிதியத்திடம் சென்றிருந்தால், இன்று பொருளாதார சீர்கேடு ஏற்பட்டிருக்காது. நாட்டில் தற்போது வெளிநாட்டு திரவ ஒதுக்கமாக 1,000 பில்லியன் டொலர்கள் கூட இல்லை.
இதற்கிடையில், எதிர்வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில் 1,440 மில்லியன் டொலர்கள் கடனாகவும் வட்டியாகவும் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான இயலுமை தற்போது இல்லாமல் போயுள்ளது.
சர்வதேச பிணை முறி கடன் தவணையை ஒரு தடவை செலுத்த முடியாவிட்டால், செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனையின் படி பெற்ற முழு கடனையும் திருப்பிச்செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும்.
இலங்கையின் சுயகௌரவத்துக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலமையை சீரமைக்ககூடிய புதிய திட்டங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அரசாங்கத்தை முன்னெடுக்கும் ஆளுமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு!