சமையல் எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களுக்கு லிட்ரோ மற்றும் லாப்ஸ் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகாரசபையின் சட்டப் பிரிவு தற்போது வழக்குத் தாக்கல் செய்து வருவதாகவும், இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஸ் சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பை இரண்டு எரிவாயு நிறுவனங்களும் கவனிக்கவில்லை என்று கூறிய அதிகாரி, அதன்படி அந்தந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை தவறவிட்டுள்ளதாக தெரிகிறது என்றார்.
இதுபோன்ற பல சம்பவங்களில் காஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்ட பாகங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதற்கு எரிவாயு நிறுவனங்கள் காரணமா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எரிவாயு தொடர்பான விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.