நாட்டில் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – வலப்பனையில் நேற்று விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின், மக்களுடன் உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலையில் உள்ளது.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மேலும், சரியான விவசாய ஆலோசனைகளை வழங்க முடியாதவர்களே தற்போது ஜனாதிபதியுடன் உள்ளனர்.
சேதன பசளை பாவனைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்ட முறையே தவறானது என்கிறோம்.
தற்போது அவர்கள் இது தொடர்பில் பிறப்பித்த வர்த்தமானி முன்பு போல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எனினும் பெரும்போகச் செய்கை தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் நெல் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் பூச்சியமாக மாறும்.
மரக்கறி உற்பத்தியும் அப்படிதான். விளைச்சல் குறைவடைந்ததன் காரணமாகவே மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
தேயிலை உற்பத்தியும் அவ்வாறுதான். எமது தேயிலை வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
எனவே இவர்களின் செயற்பாடுகளால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகளே காரணம்.
எனவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்வரும் 2022 ஆம் ஆணடு வரவு செலவு திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் வெடித்து சிதறும் என்பதே உண்மை – என்றார்.