நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: இரண்டு குழுக்களைத் தவிர மற்ற அனைத்தின் நடவடிக்கைகளும் இரத்து

நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு, நிலையியற் கட்டளைக் குழு, சட்டவாக்க நிலையியற் குழுக்கள் உள்ளிட்ட பல குழுக்கள் செயற்படாமல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் தொடர்ந்து செயற்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவு செய்து கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேவேளை கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை பதவிகளில் இருந்து நீக்கும் நோக்கில் நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை நியமிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களின் உறுப்பினர்களாக முற்றாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *