பல பேருந்து சேவைகள் இடம் பெற்றாலும் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்லமுடியாது தவிப்பதாக பனிக்கன்குளம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இருந்து மாங்குளம் பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து சேவைகள் இருந்தும் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்லமுடியாமல் உள்ளனர்.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையில் மாணவர்கள் காணப்படுவதாகவும், பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும் இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஏ-9 வீதியில் கிழவன்குளம், பனிக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்று வருகின்றனர்
இந்நிலையில் குறிப்பாக ஏ-9 வீதியில் பல பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதும் பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதில் சிறிய தொகை பணமே கிடைக்கும் என்பதாலும் குறித்த பகுதிகளில் இருந்து பயணிகளையும் சரி பாடசாலை மாணவர்களையும் ஒழுங்கான நேரத்திற்கு ஏற்றாமல் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் காலை 7 மணிமுதல் வீதியில் வந்து நிற்பதை அவதானித்த போதும் பல பேருந்துகள் குறித்த மாணவர்களை ஏற்றாது பயணிக்கின்றன
இன்று திங்கட்கிழமை காலை 8 மணிவரையில் மாணவர்கள் பாடசாலை செல்லமுடியாது வீதியில் நின்றதை அவதானிக்க முடிந்தது.
பல்வேறு தடவைகள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பேருந்து சாரதிகள் நடத்துனர்களது அசண்டையீனத்தால் மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை காணப்படுகிறது
பயணிகள் மாணவர்களை ஏற்றாது பயணிக்கும் பேருந்துகளை உரிய சேவையை வழங்க உரிய அதிகாரிகள் பணிக்குமாறும் இல்லையெனில் பாடசாலை சேவை ஒன்றை ஏற்படுத்தி தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.