
கண்டி – குண்டசாலை, நத்தரம்பொத பிரதேசத்தில் எரிவாயு தொடர்பான சம்பவத்தில் தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.
அதன்படி 100 மில்லியன் ரூபா (ரூ. 10 கோடி) நட்டஈடு கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் வில்கமுவ, பிதுருவெல்ல, தேவகிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் தனது பிள்ளைகளின் மேலதிக கல்விக்காக குண்டசாலை பிரதேசத்திற்கு வந்து தற்காலிக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் எரிவாயு கசிவு காரணமான விபத்தில தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த வீட்டில் கடந்த டிசம்பர் 01ஆம் திகதி காலை வேளையில் அவர் உணவு சமைத்துக்கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை (10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கமோ அல்லது பொறுப்பான எந்தவொரு நிறுவனமோ விசாரணை நடத்தவில்லையென மரணமடைந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
