41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியா… ஜெர்மனியை வீழ்த்தி சாதனை!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று பதக்க ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சர்வதேச தரநிலையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது.

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. கடைசி நிமிடங்களில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் தடுப்பு காரணமாக இந்திய அணி வெற்றியை ருசித்தது.

இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 1-7 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது.

அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. விவேக் சாஹர், ஹர்மன்பீரித் சிங் ஆகியோரின் கடைசி நேர கோல்களால் இந்திய அணி வெற்றியை சாத்தியமாக்கியது. இதன் மூலம் காலிறுதியில் தங்கள் இடத்தை உறுதி செய்துக் கொண்டது.

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஜப்பானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. இதனையடுத்து ஏ பிரிவில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதனையடுத்து பி பிரிவில் மூன்றாவது இடம் பிடித்த பிரிட்டன் அணியை காலிறுதியில் எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

பி பிரிவில் 4 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்து, காலிறுதியில் ஸ்பெயினை தோற்கடித்த பெல்ஜியம் அணியை அரையிறுதியில் எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெண்கலப்பதத்துக்கான இன்றையப் போட்டியில் ஜெர்மனியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *