மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு..!

முட்டையை 55 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், வர்த்தகர்களிடம் கோரியுள்ளது.

உற்பத்திச் செலவுகளுக்கு அமைய, வெள்ளை முட்டை 49 ரூபா சிவப்பு முட்டை 50 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோரியதாக அந்த சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ், எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அதாவது, தற்காலிகமாக 55 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோருகின்றோம்.

உற்பத்தி கிடைக்கும்போது, எதிர்காலத்தில் இந்த விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன டி சில்வா மற்றும் பேமா சுவர்ணாதிபதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சேவை சபை கூட்டம் நேற்று இடம்பெற்ற போது, வெள்ளை முட்டைக்காக 42 ரூபாவும், சிவப்பு முட்டைக்காக 44 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இன்று குறிப்பிட்டார்.

அதேநேரம், இந்த விலைகளுக்கு தமது கட்சிக்காரர்கள் இணங்கப்போவதில்லை என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சில்வா அறிவித்தார்.

அத்துடன், முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட விலையை விட, குறைந்த விலையே தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply