தமது தேவைகளை நிவர்த்திக்கவே வடக்கு ஆளுநரை மாற்ற முயற்சி! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரை மாற்ற வேண்டுமென முண்டியடிப்போர் தமது குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற ஆளுநரை கதிரையில் அமர வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பில்  ஒரு சில அரசியல்வாதிகள் சார்ந்த ஊடகங்களில்  பேசு பொருளாக தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது.

நான் அறிந்த வகையில் தற்போதைய வடமாகாண ஆளுநர் அரசியல்வாதிகளுக்கு சலாம் போடுபவராக இல்லை.

அதன் காரணமாக அரசியல்வாதிகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமக்கு இசைந்தவர் ஒருவரை ஆளுநராக ஆக்கி தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக முண்டியடிக்கிறார்கள்.

வடக்கில் தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக சுவீகரிக்கப்படுவதாக ஆளுநர் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் .

ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக காணப்படும் நிலையில் ஜனாதிபதி எதைச் சொல்கிறாரோ அதனை நிறைவேற்றுவராகவே ஆளுநர் காணப்படுகிறார்.

தற்போதைய வடக்கு ஆளுநர் எவ்விதமான அரசியல் வேறுபாடுகள் இன்றி மக்களுக்கான தேவைகளை தன்னால் இயன்றவரை மேற்கொண்டு வருகிறார்.

வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றால் எந்த ஒரு அரசியல் கட்சியின் சிபாரிசுகள் அற்ற மக்கள் பணி செய்யக்கூடிய ஒருவரை ஜனாதிபதி  வடக்கு ஆளுநராக நியமிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply