சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க!

தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருந்த குமரன் பத்மநாதன் வெளியில் இருக்கிறார்.

ராமன், நகுல், கருணா போன்றவர்களும் வெளியில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் சிறைச்சாலையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *