காரைதீவில் 'உணவு வங்கி' அங்குரார்ப்பண நிகழ்வு!

முறையற்ற உணவு கையாள்கையினாலும், மக்களுக்கிடையில் இருக்கும் மனரீதியான மாறுபட்ட சிந்தனை காரணமாகவும் தினந்தோறும் 70 மெற்றிக் தொன் கிலோ உணவுகள் வீண்விரயம் செய்யப்படுகின்றது. அதில் 56 சதவீதமானவை மக்கள் பாவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.  இருந்தாலும் மக்களுக்கிடையில் இருக்கும் மனரீதியான மாறுபட்ட சிந்தனை காரணமாக உணவுகள் குப்பைக்கே செல்கிறது. எங்களுக்கிடையில் இருந்த அயலவர்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் முறையில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களே இப்படியான இழப்புகளுக்கு வாய்ப்பாக உள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு இணங்க காரைதீவு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது “உணவு வங்கி” அங்குரார்ப்பண நிகழ்வு மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் ஜும்மாப்பள்ளிவாசல் உப தலைவர் டாக்டர் எம்.எச்.எம். சறூக் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த அனர்த்த காலங்களில் மக்கள் நடந்துகொண்ட விதம் பாராட்டும் விதமாக இருந்தது. காரைதீவு தமிழ் மக்களுக்கு மாவடிப்பள்ளி, சம்மாந்துறை முஸ்லிம் மக்கள் உணவுகளை வழங்கினார்கள். இந்த நிலை நீடித்திருக்க வேண்டும். நாட்டின் தற்போதைய நிலையில் யார் வறுமையில் வாடுகிறார்கள். யார் உணவின்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. பலரும் சுய கௌரவ கூச்சத்தினால் வாய்விட்டு கேட்கமுடியாமல் இருப்பதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. நன்றாக ஆராய்ந்து பார்த்து இந்த  “உணவு வங்கி” யின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், காரைதீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், மாவடிப்பள்ளி மேற்கு மற்றும் கிழக்கு கிராம நிலதாரிகளான ஏ.எம். அலியார், ஹசீனா வானு இஸ்மாயில், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசல் பொருளாளர் எம்.இஸட்.ஏ. முத்தலிப், அல்- மீஸான் பௌண்டஷன் மாவடிப்பள்ளி இணைப்பாளர் எம்.எச்.எம். அஸ்வர், மாவடி பேர்ல்ஸ் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மாவடிப்பள்ளி புதிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *