இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெற்றிருந்தால் மூன்றாவது டோஸையும் பெறமுடியும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

நோயெதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெற்றிருந்தால் மூன்று மாதத்தின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியையும் பெறமுடியும் என மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்,

எமது பகுதியில் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள் பொதுவாக 30 வயதிற்கு மேலே உள்ளனர்.

இதனால் கொரோனா நோய் தொடர்பான காப்புச் செயல்களில் கவனம் குறைதல் தவறாகும்.

சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், நெருக்கமான இடங்களை தவிர்த்தல் என்பன முக்கியமாக மேற்கொள்ள வேண்டியவையாகும்.

கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் திரிபடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவும், திரிபடைந்த கொரோனா தொற்றினை பரப்புபவர்களாகவும் மாறுவர்.

எனவே கொரோனா தடுப்பூசி பெறவேண்டிய அனைவரும் தவறாது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

சமூக இடைவெளி பேணாது, முகக்கவசம் அணியாது சாதாணமாக செயற்படும்போது சிறுவர்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்படும்.

இதனால் தற்போது 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி பெறல் தொடர்பாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

நோயெதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பு மருந்தினை முதலாவது தடுப்பு மருந்து செலுத்தி 3 மாதங்களின் பின்பு செலுத்தலாம்.

மொத்த சனத்தொகையில் 70 வீதத்திற்கு மேல் தடுப்புமருந்து செலுத்தப்படின் மட்டுமே சமூகத் தொற்றல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *