தமிழ் தேசிய உடையை அணிந்து சாணக்கியன் யாரை ஏமாற்ற முனைகின்றார்-சுரேஸ் கேள்வி

2015ம் ஆண்டுக்கு முன்பாக சுதந்திரக்கட்சியுடன் இருந்து ஒட்டி உறவாடி 2015ம் ஆண்டு தேர்தலின் மூலம் தமிழ் தேசிய உடையைப்போட்டுக்கொண்டு யாரை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏமாற்ற முனைகின்றார் என்பதை உணரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி, சுயநிர்ணயம் என பொய்யான விடயங்களை கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்றுக்கொண்டு இன்று ஒற்றையாட்சிக்கு இணக்கத்தை தெரிவித்து அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது காணாமல்ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக்கோராமல் இவ்வாறான கருத்துகளைக்கூறி மக்களை ஏமாற்றியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பா அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக என்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சரியான நிலைப்பாட்டுடன் பயணிக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிழையான அரசியலை முன்னெடுப்பதன் காரணமாக கனடாவுக்கு சுமந்திரனுடன் சென்றபோது அங்கு மக்களால் சாணக்கியன் துரத்தியடிக்கப்பட்டார்.

இதனை நீங்கள் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.வருகின்ற தேர்தலில் தமிழ் மக்கள் எங்களுக்கு சரியான பாடத்தினை கற்பிப்பார்கள்.பாராளுமன்றத்தில் எதனையும் கூறலாம்,கத்தலாம்.ஆனால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து எதனையும் கதைக்கவில்லை என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *