நாடாளுமன்றத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு- வெளியான விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றதில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

2022.10.05 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடாத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு முடியும் என்பதால், ஒவ்வொரு குழுவுக்கும் இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரிகள் இந்தக் குழுக்களின் விடயங்கள் பற்றிய போதிய அறிவு/ தொழில்சார் அனுபவம்/ தேர்ச்சிகளை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இது தொடர்பான அனைத்து விபரங்களுடனும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரங்களில் வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கல்விசார்/ தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவங்கள் பற்றிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2023 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறு “நாடாளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *