
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது என்று கூறப்படும் நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்கள் இரகசியமான முறையில் அழைக்கப்பட்டு சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க மறுத்த நிலையில், உறுப்பினர்களில் ஒருவரும், ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்தவருமான ப.யோகேஸ்வரி ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். நேற்று 43 சாட்சியங்கள் பதிவாகின என்றும், காலை 9 மணியில் இருந்து சாட்சியப் பதிவுகள் நடந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்த மக்கள் எந்த முறையில் அழைக்கப்பட்டனர் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆணைக்குழு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் இல்லை. ஆனால் ஆணைக்குழு யாழ்ப்பாணத்துக்கு வருகின்றது என்று மக்களுக்குத் தெரியும் என்று கூறினார்.
அதேவேளை, சாட்சியமளிக்க வந்த மக்கள் கேட்டபோது, ஒரு அரசியல் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு, தொலைபேசி ஊடாகத் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று சிலரும், ஓ.எம்.பி. அலுவலகத்தால் அழைப்பு வந்தது என்று சிலரும், வேறு சிலர் பிரதேச செயலகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இவை தொடர்பான விளக்கத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் விஜயலட்சுமியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.