ரணில் பச்சைப் பொய் சொல்கிறார்- அங்கஜன் எம்.பி சீற்றம்!

சுதந்திர தினத்திற்குள் தீர்வு கிடைப்பது என்பது ஒரு பொய்யான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அராலி மத்தி – கணவத்தை பகுதியில் கிராம மக்களிடையேயான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இத்தனை வருட போராட்டம், இத்தனை வருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம். ஆனால் அந்த சுதந்திர தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது.
அந்த இணக்கப்பாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அதாவது காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, யாப்பு மாற்றத்தில் தமிழர்களது அபிலாசைகள் குறித்து உள்ளடக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் கூறிய முக்கியமான விடயம், இந்த 35 வருட யுத்தத்தில் நாங்கள் இழந்தவை ஏராளம். பொருளாதாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறையிலும் நாங்கள் தற்போது கடைசியாக இருக்கின்றோம்.
நல்லிணக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் இந்த தீர்வு திட்டத்தினுள் பொருளாதார, அபிவிருத்தி இடைவெளியை நிரப்புவதற்கு, ஏனைய மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் இருக்கும் வாய்ப்புகள் எம்மவர்களுக்கும் கிடைப்பதற்குரிய அந்த நிதியையும் இந்த தீர்வு திட்டத்திற்குள் உள்ளடக்க வேண்டும் .
நீண்டகால எமது மக்களுடைய காணிகளை இராணுவத்திற்கும் கடற்படையினருக்கும் சுவீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நில அளவைத் திணைக்களம் செயற்பட்டு வந்தாலும் இது ஒரு அடிமட்டத்தில் நடக்கும் வேலைத்திட்டமாகும்.
ஆனால் ஜனாதிபதி அவர்கள் முன்மாதிரியான ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதாவது, சுதந்திர தினத்திற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய இணக்கத்தையாவது முதல் ஏற்படுத்துவதற்கு இந்த காணி விடுவிப்பு போன்ற விடயங்களை கையாள்வதாக.
அதாவது இராணுவம், கடற்படை, வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிடியில் இருக்கின்ற நிலங்களை மீண்டும் மக்களுக்கு கையளிக்க வேண்டும் என்ற விடயத்தில் எமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் சர்வ கட்சி மாநாட்டிலும்  இதை தெரிவித்திருந்தோம்.
அதற்கு ஜனாதிபதி அவர்கள் இதற்கான தீர்வினை பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இணக்கப்பாடு இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் எங்களுடைய பொருளாதாரத்தை சீரமைக்க தேவைப்படுகின்ற கொள்கை முடிவுகளை எடுக்கும்படி தான் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் தமிழர்களுடை பிரச்சினைக்கு சுதந்திர தினத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுப்பதாக எனக்கு தெரியவில்லை – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *