வடக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்துச் சேவை! வெளியான அறிவிப்பு

வடக்கு தொடருந்துப் பாதையில், மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் (2023) ஜனவரி 5ஆம் திகதி முதல் வடக்கு தொடருந்துச் சேவையை அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தவும் தொடருந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மஹவ மற்றும் வவுனியாவிற்கு இடையிலான தொடருந்து பாதையை இரண்டு கட்டங்களாக புனரமைப்பதற்கு  திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்படி, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலும் இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளதாகவும் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர தெரிவித்துள்ளார்.

மஹவ சந்திக்கும் வவுனியாவிற்கும் இடையிலான வடக்கு  தொடருந்து பாதையின் குறித்த பகுதி சுமார் நூறு வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை.

இதனால், தொடருந்துகள் அடிக்கடி தண்டவாளத்தை விட்டு தடம் புரள்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தொடருந்துகளை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அநுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், இப் பாதை புனரமைப்பு பணிகளுக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *