வடக்கில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவலை வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் எ.எல். ஜவ்பார் சாதிக் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரு பால்மா வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் , ஒரு சில வர்த்தகர்கள் பால்மாவை பதுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
கடந்த சில வாரங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பால்மா ஒன்றும், உள்ளுர் உற்பத்தி பால்மா ஒன்றிற்கும் வவுனியா மாவட்டத்தில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனினும் , ஒரு சில வர்த்தக நிலையங்களில் பால்மா இருப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அதனை பதுக்கும் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன், மாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள எமது அலுவலர்கள் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார் .
மேலும் பால்மா பதுக்கல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள இருந்தால் அருகேயுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை காரியாலயத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.