அத்துமீறியவரின் கைவிரலை கடித்த பெண்: காயத்துடன் சந்தேகநபர் தப்பியோட்டம்!

தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரின் கை விரலை பெண்ணொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று பதுளை – கந்தகெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் தனியாக இருந்த வீடொன்றுக்குள் நுழைந்த, முகத்தை துணியால் சுற்றிய நபர் ஒருவர், அப்பெண்ணை பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

அதன்போது, அவரிடமிருந்து தப்பிப்பதற்காக குறித்த பெண், அந் நபரின் கை விரல் ஒன்றை கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கடும் வலியுடன் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்தப் பெண் 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி காவல்துறைக்கு சம்பவம் குறித்து அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் முகத்தை சரியாக அவதானிக்கவில்லையென குறித்த பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விரலில் காயமடைந்த எவரேனும் வைத்தியசாலைகளில் அனுமதியாகியுள்ளனரா என காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply