மேற்பார்வையாளரின் பேச்சால் பாடத்தை மறந்த மாணவி காவல்நிலையத்தில் முறைப்பாடு!

மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக மாத்தளை காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, அங்கு பரீட்சை மேற்பார்வை கடமையிலிருந்த இருந்த ஆசிரியர் ஒருவரிடம் மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு அளித்த பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி மாணவி இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வையாளரிடம் விடையெழுத தான் மேலதிக தாள்களை கோரியதாகவும், அதன்போது, அங்கு மேற்பார்வை கடமையிலிருந்து ஆசிரியர் ஒருவர், “இவள் இவ்வளவு விடைத்தாள்களை கேட்பது, என்ன எழுதுவதற்கு என்று தெரியவில்லை” என்று கூறியதாக மாணவி தெரிவித்துள்ளார்.

அவர் செயற்பட்ட விதத்தின் காரணமாக  தான் பாடத்தையும் மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்பார்வையாளராக செயற்பட்ட ஆசிரியரை பற்றிய எந்தத் தகவலும் தனக்கு தெரியாது எனவும் மாணவி குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply