பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அரசாங்கம்: மாறுபட்ட நிலைப்பாடு – நிரோஷ் சுட்டிக்காட்டு!

ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறி அவர்களுக்குச் செந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்கு அபகரிப்பதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை  உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது.

ஆகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் இராணுவமயப்படுத்தலை ஏற்க முடியாது என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப்  பிரதேச செயலகம், கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளது.

இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர்.

அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தியுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கு என மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு  எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *