13வது திருத்தத்தையோ சமஸ்டிசயையோ கோராதீர்கள்:பொதுவாக்கெடுப்பே தீர்வுக்கு வழி- கோ.ராஜ்குமார் வேண்டுகோள்!

இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தங்களின் சுய நலனுக்காக தமிழர்களை ஏமாற்றி வந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வடக்கு கிழக்கு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

தந்தை செல்வா 3 தசாப்தங்களாக சமஸ்டிசிக்காக குரல் கொடுத்தார், பின்னர் ஜி.ஜி.பொனம்பலம் மற்றும் மு.திருச்செல்வம் ஆகியோருடன் இணைந்து தமிழீழம் வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.

அதன்பின்னர் வந்த சம்பந்தன் – சுமந்திரன் குழுவினர், எமக்கிருக்கும் 75 வருட அரசியல் அனுபவம்,சிங்கள அரசுக்கு எதிரான 35 ஆண்டுகால போர் மற்றும் அதன் வலிமை,
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை,சர்வதேச நீதி உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, எமது உரிமைகளை ‘எக்கிய ராஜ்ஜிய’ மூலம் எப்படிப் பெறுவது என்பது தெரியும் என்று கூறிவந்ததாகவும் கோ.ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தம் ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையால் நிர்வாணமாக்கப்பட்டு பிண்டமாகிவிட்டதாகவும்  மேலும், 13வது திருத்தம் ஒற்றையாட்சி சிங்கள ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த காரணத்திற்காக, 13 வது திருத்தம் தமிழர்களின் விருப்பமல்ல. 1987இல் தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது, 13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது.

தயவு செய்து 13வது திருத்தத்தையோ சமஸ்டிசயையோ கோராதீர்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கோருங்கள். தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தமிழ் இறையாமையை பெற முடியும்.எமது இலக்கான தமிழர் இறையாண்மையை அடைவதற்கு எமக்கு ஒரு பாதை உள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டசபையில் தனது உரையின் போது நமது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்று வழிகாட்டினார்.தாயகத்தில் உள்ள தமிழர்களாகிய நாமும், புலம்பெயர் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம்.ஆனால் இரு தினங்களுக்கு முன், இந்த தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த போது, அவர்கள் தமிழ் பொது வாக்கெடுப்பு கேட்கவில்லை, இரண்டு இனக் கட்டமைப்புகளுடன் வேலை செய்யாத சமஸ்டியை மட்டுமே கேட்டார்கள்.

எமது தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் காலதாமதமின்றி பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வேண்டி, பிரார்த்தனை செய்வதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *