75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.







பிரதம அதிதிகளாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் சமத்துவ உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் தமிழ்பேசும் மக்கள் மற்றும் ஏனைய மக்களினுடைய அரசியல் உரிமைகளை பாதுகாத்து , அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் காணி விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க வழிசமைக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததுடன் குறித்த விடயத்தை மக்களுக்கு உறுதியாக எடுத்துரைக்குமாறும் அவர் குறிப்பிட்டதாக இதன் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று மேற்கொள்ளப்படும் இப்பூஜை வழிபாடுகள் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு ஆசி வேண்டுவதாக காணப்படுகின்றது. அந்த வகையில் அனைத்து மதங்களின் ஆசியும் இதற்காக வேண்டப்படுவதுடன் அது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வகையில் நிலையான திட்டங்கள் வகுத்து செயற்படல் மூலம் அதனை வெற்றி கொள்ள முடியும்.
சுதந்திர தின கொண்டாட்டம் மூலம் சர்வதேசத்திற்கு எமது நாட்டின் பன்மைத்துவ சமூகங்களின் ஐக்கியத்தை வெளிக்கொணரக்கூடியதாக அமையும். பெளத்த விழுமியங்களை பெரும்பான்மையாக கொண்ட இந்நாடு ஏனைய இனங்களை சேர்ந்த மக்களது பண்பாடு மற்றும் கலாசாரங்களை பேணி எவ்வாறு ஒருமித்த அடிப்படையில் செயற்படுகின்றது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட சிறந்த சந்தர்ப்பமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி.எஸ்.ரத்னாயக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.













