வலி, கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை பிடிக்க கடற்படை முயற்சி!

வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்த நிலையில் அவ்விடத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விரைந்து செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கையில், கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். 

அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன் அவ்வாறாக குறித்த காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன்.  இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03.02.2023) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுக்கின்றனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. 

நான் பரிதொரு கூட்டத்தில் இருந்து அவசரமாக  குறித்த கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கிருந்து ஏற்கனவே கடற்படையினர் விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் கருமம் முடித்துச் சென்றார்களோ, அல்லது நான் வருகின்றேன் என தகவல் அறிந்து சென்றார்களோ தெரியவில்லை.

பின்னர் நான் குறித்த பிரதேசத்தை பார்வையிட்ட போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சிட்டை பெற்று மக்களோடு மக்களாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நின்றனர்.  அடிப்படையில் இந் நிலம் உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். இதில் பிரதேச செயலாளர் முடிவுகளை இராணுவத்திற்’கு வழங்குவதற்கு முடிவுகளை எடுக்க முடியாது. 

மேலும் மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது. 

எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும் காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தினை முன்னொண்டு செல்வதிலும் அரசாங்கம் தீரம் காட்டியே வருகின்றது என வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *