கிளிநொச்சியில் 25 ஆண்டுகள் பழமையான இராணுவச் சீருடையுடன் கூடிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் கூடிய மனித எச்சங்கள் நேற்று முன்தினம் (05) அடையாளம் காணப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அப்பகுதியில் காணப்படும் பாதுகாப்பு அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
குறித்த அகழ்வுப் பணிகள் நேற்றும் (06), இன்றும் (07) முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த அகழ்வுப் பணிகளில் ஒரு கைக்குண்டு, தொடர்பாடல் சாதனம், இரண்டு தலைக்கவசங்கள், ரவைக்கூடுகள், உடைகள் மற்றம் இராணுவத்தினர் பயன்படுத்தும் உணவு பொதிகள் உள்ளிட்ட பொருட்களின் எச்சங்களுடன், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவை அனைத்தும் 25 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தடய பொருட்கள் அனைத்தும் 1997 ஆம் ஆண்டுக்கு முன் திகதியிடப்பட்ட பொருட்களாகவே காணப்பட்டுள்ள நிலையில், இரண்டும் ஒப்பீட்டளவில் ஒரே காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
இதன்போது மீட்கப்பட்ட கைக்குண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்யப்படவுள்ளது.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்கள் அனைத்தும் நாளை மறுதினம் (09) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளன.