குருந்தூர் மலை காணி விவகாரம்: ஜனாதிபதியின் பணிப்புரையை நடைமுறைப்படுத்துவதில் இழுபறி

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக ஆறு ஏக்கர்கள் நிலப்பரப்பினை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய பொதுமக்கள் மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான காணிகளை மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மட்டத்தில் இழுபறியான நிலைமைகள் நீடிப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குருந்தூர் மலையை அண்மித்த காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவந்தபோது ஆறு ஏக்கர்கள் தவிர ஏனையவற்றை உரிய தரப்புகளிடத்தில் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதேநேரம் தமிழ்த் தரப்புக்களுடனான சந்திப்பின்போதும், ஜனாதிபதி குறித்த பணிப்புரையை மீண்டும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தார்.

எனினும், தற்போதைய நிலையில் அந்த பணிப்புரை நடைமுறை சாத்தியமாகவில்லை.

குறிப்பாக, பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு தொல்பொருளியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளபோதும், அதில் பொதுமக்களின் விருப்புடன் ஐந்து ஏக்கர்களை வைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகிறது.

அதேநேரம் வனத்துறைக்கு சொந்தமான 78 ஏக்கர்களையும் தொடர்ந்து தம் வசம் வைத்துக்கொள்வதற்கு தொல்பொருளியல் திணைக்களம் முயற்சிப்பதாக தெரியவருகிறது. 

இந்த செயற்பாடுகளை தொல்பொருளியல் திணைக்களத்தின் பிராந்திய உதவிப் பணிப்பாளரே முன்னெடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், ஜனாதிபதி ரணிலின் பணிப்புரையை நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply