வவுனியா முருகனூர் பிரதேசத்தில் காதலி மற்றும் குழந்தையை கொலை செய்து எரித்த நபர்!

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 6 மாத கைக்குழந்தை மற்றும் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து, வீட்டிக்குள்ளேயே எரித்து நபர், ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டதாக வவுனியா பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காணாமல் போன, பெண் மற்றும் குழந்தை குறித்து உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனித உரிமை அலுவலகத்திற்கு அறிவித்திருந்தனர்.

இது குறித்து வவுனியா குற்ற விசாரணைப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் மூன்று வருடங்கள் முழுமையான விசாரணையின் பின்னர், கொலையாளியை கண்டுப்பிடித்து, அதன் பிறகு நடத்திய விசாரணைகளில் சம்பவம் தொடர்பான சகல தகவல்களும் வெளியாகியன.

Advertisement

28 வயதான கொலையாளி கொலையின் பின்னர் இரண்டு முறை வெளிநாடு சென்று வவுனியா திரும்பியுள்ளதுடன் காணாமல் போன பெண் மற்றும் குழந்தை குறித்து பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரித்த போது பொய்யான தகவல்களை கூறி வந்துள்ளார்.

எனினும் பொலிஸார் தொலைபேசி விபரங்களை தேடிய போது, சந்தேக நபர் காணாமல் போன பெண்ணுடைய தொலைபேசியை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் ஒப்பந்த வேலை ஒன்றுக்காக சென்றிருந்த போது, அயலில் வசித்து வந்த யுவதியுடன் ஏற்படுத்திக்கொண்ட காதல் தொடர்பால் யுவதி கருவுற்றுள்ளார்.

யுவதிக்கு குழந்தை பிறந்து 6 மாதத்தின் பின்னர், யுவதியை திருமணம் செய்துக்கொள்ளவதாக சந்தேக நபர் உறவினர்களிடம் கூறி, வவுனியா முருகனூர் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு யுவதியையும் குழந்தையும் அழைத்துச் சென்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வீட்டுக்கு அழைத்துச் சென்ற சந்தேக நபருக்கும் யுவதிக்கும் இடையில் அன்றிரவு ஏற்பட்ட பிரச்சினை முற்றியதை அடுத்து, சந்தேக நபர் யுவதியையும் குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் வீட்டுக்குள்ளேயே ஓலை, மண் எண்ணெய் மற்றும் சீனியை பயன்படுத்தி, சடலங்களை எரித்து விட்டு, வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான பரமேஸ்வரன் சஜின்திக்காவும் அவரது 6 மாத குழந்தையுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply