கதிகலங்கிநிற்கும் கல்முனை பிராந்தியம்!

வைத்தியசாலைகளில் நிரம்பிவழியும் கொவிட் நோயாளிகள்!கதிகலங்கிநிற்கும் கல்முனை பிராந்தியம்!தரையிலும் வீடுகளிலும் நோயாளிகள் என்கிறார் பணிப்பாளர் சுகுணன்.

(வி.ரி.சகாதேவராஜா)

நாட்டில் வேகமாகப்பரவிவரும் கொவிட் நோய்த்தாக்கத்தினால் மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் கல்முனைப்பிராந்திய வைத்தியசாலைகள் கொவிட்நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன.
அங்குள்ள கட்டில்கள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்திருப்பதால் இடநெருக்கடி சிக்கல் தோன்றியுள்ளது. சில வைத்தியசாலைகளில் குறிப்பாக அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் புதிய நோயாளிகள் தரையில் அமர்ந்து சிகிச்சைபெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர்.

குறிப்பாக கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  சகல கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் சிகிச்சைநிலையங்கள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பிவழிவதால் சுமார் 50நோயாளிகள் இடமில்லாமல் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனைப்பிராந்தியம் மீண்டும் கதிகலங்கிநிற்கும் நிலை எழுந்துள்ளது.
கொவிட் நோயாளிகள் அதிகரித்துக்கொண்டுபோவதால் காரைதீவு ,சாய்ந்தமருது வைத்தியசாலைகளையும் கொவிட் சிகிச்சைநிலையமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
இதேவேளை இடைத்தங்கல் நிலையங்கள் முறைமையை ஒழித்து அவற்றையும் சிகிச்சைநிலையங்களமாக மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது குணங்குறிகளற்ற நோயாளிகள் அந்தந்த சுகாதாரவைத்திய அதிகாரி கண்காணிப்பில் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

அண்மைக்காலமாக கொவிட் தொற்றுக்குள்ளாவோரில் 10வீதமானோர் வைத்தியசாலை சிகிச்சைநிலையங்களில் அனுமதிக்கப்பட்டுவந்தனர். ஆனால் கடந்த 3தினங்களாக 50வீதமானோர் இவ்விதம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எனவே ,இது டெல்டா வைரஸ் திரிபாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே நாம் கல்முனை பொத்துவில் நிந்தவூர் அக்கரைப்பற்று பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்.
அவர் பொதுமக்களுக்கு பொதுவான அறிவி;த்தலொன்றை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனைப்பிராந்தியம் வருகிறது. மூவினங்களும் அடர்த்தியாக வாழ்ந்துவருகின்ற அம்பாறை மாவட்டத்தில் இந்த டெல்டா திரிபு வைரஸ் மிகஇலகுவாக பரவவாய்ப்புண்டு.

எனவே மக்கள் முதலாவது தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற அலட்சியத்துடன் இருந்துவிடாது சுகாதாரநடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப்பேணி தஙகளைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
கடந்த ஒருசில நாட்களாக வழமைக்குமாறாக எமது பிரதேசத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்துவருகின்றன. இங்கும் ‘டெல்டா’ வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே சுகாதாரத்துறையை மாத்திரம் நம்பியிராது சுகாதாரநடைமுறைகளை முறைப்படி கடைப்பிடித்து முடியுமானவரை வீட்டிலிருங்கள் என்றார்.

Leave a Reply