தேர்தலை கண்டு அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளை நினைத்தே அச்சமடைகின்றோம்! நிதி அமைச்சு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நினைத்து அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளை நினைத்தே அச்சமடைகின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05.02.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிவில் பிரஜை ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் நிதியமைச்சின் செயலாளர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது, இருப்பினும் தேர்தல் செலவுகளை கண்டு அச்சமடைகிறோம்.

நாணயம் அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறன பின்னணியில் தேர்தலுக்காக நிதி அச்சிட்டால் பணவீக்கம மீண்டும் உயர்வடைந்து பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும்.

அரச செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் சகல அரச நிறுவனங்களுக்கும் விசேட சுற்று நிரூபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பதற்கும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தற்போது வெற்றியடையடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

சிறந்த முகாமைத்துவத்தினால் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *