வடகிழக்கிலுள்ள கட்சிக்கான ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஏனைய கட்சிகள் தமது கட்சிகள், துண்டினை தூக்கு போடுவதற்கு மாத்திரமே பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்மக்களின் அரசுக்கான கட்சியும் தமிழரசுக் கட்சியே எனவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சியும் அதுவே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் கப்பல் ஒன்றை வாடகைக்கு ஒருவர் எடுத்து வந்து மக்களை ஏமாற்றினார். அவர் இன்று மட்டக்களப்பிற்கு அதனை வாடகைக்காக பெற்று வந்துள்ளார்.
அம்பாறையில் நடந்தது ஒருபோதும் மட்டக்களப்பில் நடைபெறாது என்றார்.
இதேநேரம் இம்முறை கப்பலுக்கு பதிலாக படகை ஒருவர் எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார். எவர் வந்தாலும் தமிழ் மக்களின் நிரந்தர கட்சியின் சின்னம் வீடுதான் என்றும் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.