தேர்தலில் பஸிலின் தலைமையில் மொட்டு வெற்றிவாகை சூடும்! – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!

“எங்கள் பக்கத்தில் தேர்தலை – எங்களது கட்சியை வழிநடத்திச் செல்பவர் பஸில் ராஜபக்ச. தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நிச்சயம் நடக்கும் என்றும் எல்லோரையும் தயாராகுமாறும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் பஸிலின் தலைமையில் ‘மொட்டு’ வெற்றியடையும்.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் மேலும் கூறுகையில்,

“அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது. எல்லோரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரம்தான் நாட்டைக் கட்டி எழுப்ப முடியும்.

உலக நாடுகளில் இப்படியொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேலை செய்யும். இங்கு அப்படி இல்லை.

கொரோனா நேரத்தில் நாம் சர்வட்சி கூட்டத்தை கூட்டியபோது அதிகமான எதிர்க்கட்சிகள் வரவில்லை. எதிர்க்கட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே கலந்துகொண்டார்.

அரசியல் ரீதியாக நாம் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அவர் அதையெல்லாம் மறந்து மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்வந்தார். அப்படித்தான் எல்லா எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. மார்ச் 9 இல் தேர்தல் நடக்கும் என்று நம்புகின்றோம். கட்சி என்ற அடிப்படையில் நாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்.

சஜித் பிரேமதாஸ சர்வதேச நாணய நிதியத்தை மிரட்டுகின்றார். அந்த நிதியத்துக்கு தாம் கட்டுப்படமாட்டோம் என்கின்றார். ஒரு பெரிய நிறுவனத்துக்கு எதிராக அவரால் அப்படிச் செய்ய முடியுமா?” – என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *