கண்மூடித்தனமாக தாக்கிய பொலிசார் – பொறுப்பு கூறவேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை மேற்கொண்டதற்கான காணொளிகளை பார்வையிட்டுள்ளதாகவும் பொலிசாரின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும், முறையற்ற நிர்வாகம் மற்றும் அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியும் கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை சத்தியாக்கிரகப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போட்டத்தை கலைப்பதற்கு பொலிசார் முறையற்ற விதத்தில் செயற்பட்டிருந்ததாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சுமத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி கைது நடவடிக்கையின்போது தடியடிப்பிரயோகம் நடாத்தப்படுவதையும் அவதானிக்கமுடிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் என்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply