தமிழர் எழுச்சி பேரணிக்கு சிங்க கொடியை காட்டி எதிர்ப்பு! பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிப்பு

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின்  வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை சென்றடைந்துள்ளது.

இதன்போது, ஏறாவூர் நகர் பகுதியில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்க கொடி காட்டி சிலர் போராட்டம் செய்துள்ளனர். அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘கறுப்பு தினம்’ என பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நில உரிமைகளை கோரி இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,’ ‘விழ.விழ.எழுவோம்’ என்ற கோசத்துடன் பதாதைகளை கையில் ஏந்தியவாறும் சிகப்பு, மஞ்சள்  நிற கொடிகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இப்பேரணியானது கடந்த 4 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்  இருந்து அரச பாதுகாப்பு பிரிவினரின் எதிர்ப்புக்கு மத்தியில் கிளிநொச்சி முல்லைத் தீவு ஊடாக நேற்று 6 ஆம் திகதி திருகோணமலையை வந்தடைந்தனர்.

இன்று கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் மற்றும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பேரணி காந்தி பூங்காவில்  பிரகடணம் வாசிக்கப்பட்ட பின்னர் நிறைவு பெறும்.

Leave a Reply