புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு; பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டிலுள்ள பல தொழிற்சங்கங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

மேலும் பல தொழிற்சங்கங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் அழைப்பு விடுத்துள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்,  பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் ஆகியன இன்று புதன்கிழமை அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அதேநேரம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணியாளர்களும் இன்று மதியத்துடன் வங்கிச் சேவைகளை நிறுத்தி வரி வசூலிப்புக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர அடையாளப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று காலை 8 மணிக்கு இந்த அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கவுள்ளதுடன் நாளை காலை 8 மணி வரை இடம்பெறும்.

எனினும், சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வரி திருத்தத்தை அரசு திரும்பப் பெறக் கோரி பல சுகாதார தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதேநேரம், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் கடந்த 5 ஆம் திகதி விடுத்த அறிவித்தலின் பிரகாரம் இன்று புதன்கிழமை முழு நாளும் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. 

ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், இன்று சுகவீன விடுமுறை தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.  

நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானத்தின் படி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டங்களுடன், வங்கி ஊழியர்களும் இன்று அரைநாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதனால் வங்கி சேவைகள் நண்பகலுடன் இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *