மலையகத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஓட்டேரி தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு குறித்த 06 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்றைப் பருந்து ஒன்று தாக்கியதை அடுத்து குழப்பம் அடைந்த குளவிகள் தம்மைத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான 06 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளவித் தாக்குதல் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.