
இலங்கையில் கடந்த ஆண்டு (2021) புதிதாக 150 மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் சுற்றுலாத் துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு 81 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் பல்பொருள் அங்காடிகளுக்கு 69 உரிமங்கள் வழங்கப்பட்டதாகக் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் நகரங்களில் புதியதாக மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க ஒரு உரிமம் கூட வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மதுபான போத்தல்களில் டிஜிட்டல் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வரியற்ற மற்றும் தரமற்ற மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதைத் தடுப்பதற்காக இந்த வேலைத்திட்டத்தின் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏப்ரல் முதலாம் திகதிக்குப் பின்னர் உள்ளூர் சந்தையில் டிஜிட்டல் ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபான போத்தல்கள் விற்பனை செய்யப்படாது எனவும் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் சுமார் ஏழு வீதமான தரமற்ற மதுபான போத்தல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கலால் திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.