மக்கள் ஒருபோதும் தேர்தலை நடத்தக் கோரவில்லை! – இராஜாங்க அமைச்சர் பதிலடி

“இலங்கையின் இன்றைய நிலைமையில் மக்கள் ஒருபோதும் வீதிக்கு வந்து தேர்தல் கேட்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறே அவர்கள் கூறுகின்றனர்.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

‘துணிவு இருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்திக் காட்டுங்கள்’ என்று அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்திருந்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும. இதற்குப் பதில் வழங்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

“வாக்குரிமையை நிலைநாட்டியவர் மஹிந்த ராஜபக்சதான். போரை நிறைவு செய்த பின் வடக்கு, கிழக்கில் நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்.

கள்ள வாக்குகள் போடப்பட்ட ஒரு காலம் இருந்தது. தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்தி கள்ள வாக்குகள் போடுவதை மஹிந்த ராஜபக்ச நிறுத்தினார். அதனால் தேர்தல் தேவையில்லை என்று சொல்லுவதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், இன்று இருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை திரிவுபடுத்தப்பட்ட ஒன்று. இது பற்றி எவரும் நாடாளுமன்றில் பேசுவதில்லை.

ஜே.வி.பி. எல்லாவற்றையும் விமர்சிக்கின்றது. ஒருபோதும் இந்தத் தேர்தல் முறைமை பற்றி ஜே.வி.பி. கூறியது இல்லை. அவர்களுக்குத் தேவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும்தான். முடிந்தால் ஜே.வி.பி. ஒரு சபையையாவது கைப்பற்றிக் காட்டட்டும்.

மக்கள் ஒருபோதும் வீதிக்கு வந்து தேர்தல் கேட்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்குமாறே அவர்கள் கூறுகின்றனர்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம் என்று நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக அது முடியாமல் போனது.

இதற்கு எதிராக எழுந்த போராட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தடுக்கப்பட்டது. இல்லாவிட்டால் நாடு மிக மோசமான நிலைக்குச் சென்றிருக்கும். 1988, 1989 இல் இடம்பெற்ற இடம்பெற்ற அதே அழிவு இடம்பெற்றிருக்கும். போராட்டத்துக்கு ஜே.வி.பியின் 50 வீத பங்களிப்பு உண்டு. இதை ஜனாதிபதி முடக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றார்” – என்றார்.

Leave a Reply