மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது – எரிசக்தி அமைச்சர் திட்டவட்டம்!

மின்சார சபைக்கு எதிர்வரும் மாதம் முதல் கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதியின் போது தமது அமைச்சு பாரிய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு தொடர்ந்து கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

3 நாட்களுக்கு தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு 25 மில்லியன் டொலர்களைத் திரட்டிக் கொள்வதற்கு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளோம்.

டொலர் பிரச்சினைக்கான தீர்வினை மின்சாரத்துறை அமைச்சு காண வேண்டும். பிறிதொரு அமைச்சின் நிதி நெருக்கடியினை எம்மால் தொடர்ந்து ஏற்க முடியாது.

நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை வலு சக்தி துறை அமைச்சும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் முகாமைத்துவம் செய்கிறது.

மின்சாரத்துறை அமைச்சினை காட்டிலும் வலுசக்தி துறை அமைச்சு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

இந்த நிலையில் மின்சார சபை தமக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர் திரட்டிக் கொடுத்தால் தடையில்லாமல் எரிபொருளை வழங்க முடியும்.

தற்போதைய நிலையில் வலு சக்தி அமைச்சு மின்சாரத்துறை அமைச்சுக்கும் டொலர் திரட்டிக் கொடுப்பது என்பது பிச்சை எடுப்பவரை வறுமையில் உள்ளவர் கவனித்துக் கொள்வதைப் போன்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *