
வீழ்ந்த இடத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்நாட்டை நேசிக்கும் மக்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை ஒன்றிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி வீழ்ச்சியடைந்திருக்கும் இடத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டுப் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றாகி நாட்டு பிரச்சினையாக மாறியுள்ளன.
காலையில் பணிக்கு செல்வதா அல்லது எரிவாயு சிலிண்டரை வாங்க செல்வதா என்று சிந்திக்க வேண்டிள்ளது.
சுமார் 24 நாட்களுக்குப் பின்னர் எரிவாயு சிலிண்டர் கிடைத்தாக எனது நண்பர் எனக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதாவது அவர் எரிவாயு சிலிண்டரை வியாபார நிலையத்துக்கு கொடுத்து 24 நாட்களின் பின்னரே அவருக்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்கப்பெற்றுள்ளது.
இன்று நாட்டில் இருவகையான பொருளாதாரம் காணப்படுகின்றது.
பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதார செலவு அதிகரிப்பு, எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு என எதிபார்ப்புமிக்க பொருளாதாரம்.
மற்றையது கறுப்புச் சந்தை பொருளாதாரம். இந்த கறுப்புச் சந்தையில் வியாபாரிகள் பலர் இருக்கின்றனர்.
அரசியல் ரீதியிலான வியாபாரிகளும் பொருளாதார வியாபாரிகளும், பொருளாதாரத்தை கொன்றவர்களும் பொருளாதாரத்தை கொள்ளையடித்தவர்களும் உள்ளனர்.
இவர்கள் மக்களது பிரச்சினைகளை விற்பனை செய்து வாழ்கின்றனர்.
அதேபோன்று இருவகையான அரசியல் காணப்படுகின்றது. நாம் தற்போது கதைத்துக்கொண்டிருப்பது ஒருவகையான அரசியல்.
மற்றைய அரசியல் கொள்ளையடிக்கும் அரசியல். நிர்வாகம் இல்லாத ஒரு நிர்வாகம். இந்த அரசியல் கறுப்புச் சந்தையுடன் தொடர்புப்பட்டது – என்றார்.

