ஜனாதிபதியால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வகிக்க முடியாது! குமார வெல்கம

ஜனாதிபதியால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையினை கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கருத்துரைப்பது பயனற்றதாகும். ஜனாதிபதியின் நிர்வாகத்தின் விளைவினை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தேன்.

நான் குறிப்பிட்டதை மக்கள் ஏற்கவில்லை. தற்போது அனுபவ ரீதியில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்சர்களுக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்றிற்கு வழங்கினார்.

பின்னர் அவர் தலைமையிலான சுதந்திர கட்சியினர் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்கினார்கள்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் – தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *