கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் – WHO

ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது குறித்து மக்கள் அலட்சியம் கொள்ளக்கூடாது என்றும் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உலக அளவில் அத்தொற்று உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் மட்டுமல்லாமல் டெல்டா வகை கொரோனா தொற்றும் தொடா்ந்து பரவி வருகிறது என தெரிவித்துள்ள அவர், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், காற்றோட்டமான இடத்தில் இருத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும் பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதையும் மக்கள் தவிா்க்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள நபா்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்திக் கொண்டாலும் அத்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *