ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

எனினும், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலிய அணி, தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.

சிட்னி மைதானத்தில் கடந்த 5ஆம் திகதி, ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, உஸ்மான் கவாஜா 137 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 294 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 113 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், போலண்ட் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 122 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 388 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 388 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் இறுதிநாள் வரை 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தது. இதனால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸெக் க்ரெவ்லி 77 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்கொட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கேமரூன் கிறீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 137 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் பெற்றக்கொண்ட உஸ்மான் கவாஜா தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 14ஆம் திகதி ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *