நாடு பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றது! – வடிவேல் சுரேஸ் எம்.பி

நாடு பாரியதொரு சரிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலைமை நீடிக்குமாயின் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். மக்களால் வாழ்வாதார சுமையை எதிர்கொள்ள முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

பால், சீனி இல்லாமல் தேநீர் அருந்துங்கள், அரிசி இல்லாமல் சோறு சாப்பிடுங்கள் என்று இந்த அரசாங்கம் கூறுகின்றது.

அத்தியாவசியப் பொருட்களுக்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வரிசையில் நிற்க வேண்டிய யுகமே உருவாகியுள்ளது.

ஆசிரியர்கள், வைத்தியர்கள், அரசாங்க ஊழியர்கள் எனப் சகலரும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலைமை தொடர்ந்து நீடிக்குமாயின் நமது நாடு பாரியதொரு பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கி செல்லும்.

எனவே, நம்மை நாமே சுதாகரித்துக்கொண்டு நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரிடம் நாட்டை ஒப்படைப்பது சரியான ஒரு தீர்வாகும்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *