இலங்கைக்கான மற்றுமொரு உதவியும் தூக்கியெறியப்படும்: தமிழ்த்தேசியக் கட்சிகளும்!

சீனாவை மையப்படுத்திய இந்தோ பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்க, இந்திய அரசுகள் மிகவும் நுட்பமான முறையில் இலங்கையைக் கையாள, இலங்கையும் ஈழத்தமிழர் விவகாரத்தை உள்ளகப் பிரச்சினையாக மாற்றும் நோக்கிலும், தனது பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாகவும் பயன்படுத்துகின்றது.

இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் தொகை விரைவில் வழங்கப்படுமென இந்தியா உறுதியளித்துள்ளது.

900 மில்லியன் டொலர் நிதியுதி வழங்கப்படுமென கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பல்கே சென்ற 13ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான கடனுதவி கிடைக்குமென கொழும்பில் உள்ள இலங்கை அரசின் நிதியமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நடத்திய இணையவழி உரையாடலில் நிதியுதவி குறித்துப் பேசப்பட்டது.

அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இணைய வழி உரையாடல் ஒன்றை நடத்தி முடித்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சனிக்கிழமை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை இந்த உரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அந்தப் பதிவில் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த உரையாடலில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்ற விபரங்கள் எதனையும் சமூக வலைத்தளத்தில் ஜெய்சங்கர் பதிவிடவில்லை.

எனினும், அறிவிக்கப்பட்ட 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணிக்கான நிவாரணம் குறித்தும், கடனுதவித் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த உரையாடலில் பேசப்பட்டதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதுடன், எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் டொலர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிதி விரைவில் வழங்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்ததாகவும் இலங்கை நிதியமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது குறித்தும் பஷில் ராஜபக்ஸவிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸூடனும், அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 6ஆம் திகதி தொலைபேசியில் உரைடியாடியிருப்பதாக அறியமுடிகின்றது.

6ஆம் திகதி நடந்த உரையாடலின் பின்னர், அன்றைய தினமே திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது.

மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அன்றைய தினமே கைச்சாத்திட்டிருந்தனர்.

அதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, நான்காயிரத்து 900 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதென்றும். அதனடிப்படையிலேயே இந்தியா நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நடத்திய இணையவழி உரையாடல் தொடர்பான செய்திக்கும் இணையத்தளங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடிதம் அனுப்பவிருக்கும் நிலையிலேயே இலங்கைக்கான நிதியுதவித் திட்டங்கள் தொடர்பான தகவல்களும் வெளிவருகின்றன.

நிதியமைச்சராவதற்கு முன்னர் கடந்த யூன் மாதம் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சிலருடன் இணையவழி உரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் கொழும்பில் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் பீரிஸ் சுமந்திரனுடன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தூதுவர் முன்னிலையிலேயே பேச்சு நடத்தியிருந்தார்.

அடுத்த சில நாட்களில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பேராசிரியர் பீரிஸ் வெளியுறவு அமைச்சராகவும், அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பிய பசில் ராஜபக்ச நிதியமைச்சராகவும் பதவி ஏற்றிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான அணி 13 தொடர்பாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சென்ற நவம்பர்- டிசம்பர் மாதங்களில் கூடி ஆராய்ந்தது. சுமந்திரன் தலைமையிலான அணி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தது.

இந்தவொரு சூழலில் 13 தொடர்பாகவும், நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் வாக்குவாதங்களுக்கு மத்தியில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இறுதி முடிவை எடுத்துக் கையொப்பமிட்டபோதும், பின்னர் அது இழுபறியில் உள்ளது.

இந்தியத் தூதுவரிடம் கடிதத்தைக் கையளிக்க சம்பந்தன் நல்ல நாள் பார்ப்பதாகத் தமிழ் நாளேடுகளில் செய்திகள் வேறு வெளியாகியுமிருந்தன.

ஆனால் தூதுவர் கோபால் பாக்லே இந்தியாவுக்குச் சென்றதாலேயே கடிதத்தைப் பெற முடியவில்லையெனவும் கூறப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் கடிதத்தைக் கையளிக்க முன்னரே கொழும்பில் உள்ள ஏனைய வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அந்தக் கடிதத்தின் பிரதிகள் செல்வம் அணியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகச் சுமந்திரன் குற்றம் சாட்டியுமுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக செல்வம் தலைமையிலான ரெலோ இயக்கம் அமைதியாகவுள்ளது.

இந்தவொரு சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிதி நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வாக நிதியுதவி வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை தனது பங்காளி எனவும் அறிவித்துள்ளது.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் இலங்கை கையளித்துள்ளது.

சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகள் மிகவும் நுட்பமான முறையில் இலங்கையைக் கையாள, இலங்கையும் ஈழத்தமிழர் விவகாரத்தை உள்ளகப் பிரச்சினையாக மாற்றும் நோக்கிலும், தனது பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாகவும் பயன்படுத்துகின்றது.

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்திப் போரை இல்லாதொழிக்க 2009ஆம் ஆண்டு கையாண்ட நுட்பமான அதே அணுகுமுறையை, இலங்கை 21 – 22 ஆம் ஆண்டுகளிலும் கையாண்டு. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாகவே நீக்கம் செய்யப் பயன்படுத்தியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *