
யாழ். ஓட்டுமடம் இறால் வாடி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் தைப்பொங்கல் தினமான நேற்றுமுன்தினம் இரவு வாள்களுடன் புகுந்த 15 பேர் கொண்ட இளைஞர் குழு வீட்டில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த குழுவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
குறித்த இளைஞர் குழுவினர் மதுபோதையில் ஓட்டுமடம் அராலி வீதியில் நின்று அப்பகுதி இளைஞர்களுடனும், வீதியால் செல்பவர்களுடனும் தகராறில் ஈடுபட்டதுடன், இளைஞர் ஒருவரையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் புடவைக் கடையொன்றை நடத்தி வரும் மேற்படி வீட்டின் உரிமையாளரான இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் கல்வியங்காட்டிலுள்ள தனது உறவினர் வீடொன்றிற்குச் சென்றுவிட்டு பட்டா ரக வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் வாகனத்தை அங்கிருந்து செல்ல முடியாதவாறு வழிமறித்தும் குறித்த குழு தகராறில் ஈடுபட்டுள்ளது.
குறித்த குழு, அவர்களின் வாகனத்தின் மீதும், குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைத் தடுக்க முற்பட்ட அவரது மனைவியும் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியால் பொலிஸார் வந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது, குறித்த குழுவினர் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்பகுதிக்குச் சென்ற பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய, தாக்குதலுக்கு உள்ளான இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு மேற்படி இளம் குடும்பஸ்தர் சென்றுள்ளார் என்பதை அறிந்து அவரது வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு 09 மணியளவில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட குழு வீட்டின் இரண்டு கேற்றுகள், 4 கதிரைகள், மேசை எனச் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வாள்களால் வெட்டிக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவிக் காணொளியில் சில காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் மேலதிக நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், வீடு புகுந்து தாக்குதல் நடாத்தும் போது வீட்டில் நின்ற பெண் பிள்ளைகளுடன் குறித்த குழு தகாத கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.





