ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா: இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி வென்றது.

ஹோபர்ட் மைதானத்தில் கடந்த 14ஆம் திகதிஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் 101 ஓட்டங்களையும் கேமரூன் க்றீன் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் மற்றும் ஸ்டுவர்ட் பிரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 188 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களையும் ஜோ ரூட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் போலண்ட் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 115 முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 271 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அவுஸ்ரேலிய அணி சார்பில், அலெக்ஸ் கெர்ரி 49 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 6 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸெக் க்ரெவ்லி 36 ஓட்டங்களையும் ரொறி பர்ன்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ட்ராவிஸ் ஹெட் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *