சாராயக் கடைக்காரன் – விபசார விடுதிக்காரன் எல்லோரும் நாடாளுமன்றில்! – ராஜித சீற்றம்

“வட்டிக்காரன் – சாராயக் கடைக்காரன் – விபசார விடுதி நடத்துகின்றவர்கள் எல்லோரும் நாடாளுமன்றம் வந்தால் நாட்டின் நிலைமை என்ன? அவர்கள் செய்வது சமூக சேவை அல்ல. சமூக சீரழிப்பையே அவர்கள் செய்கின்றனர்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சஜித் பிரேமதாஸவால் முடியாது என்று இல்லை. அவருடன் நல்ல பொருளாதார நிபுணர்கள் உள்ளார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்க நல்ல அனுபவசாலி. அதைத்தான் பார்க்கின்றேன்.

சாராய பார் உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும். நாட்டில் 4 ஆயிரம் சாராய பார்களுக்கு அனுமதிப் பத்திரம் உண்டு. அதில் 2 ஆயிரம் பார்கள் அரசியல்வாதிகளுடையவை.

வட்டிக்காரன் – சாராய கடைக்காரன் – விபசார விடுதி நடத்துகின்றவர்கள் எல்லோரும் நாடாளுமன்றம் வந்தால் நாட்டின் நிலைமை என்ன? அவர்கள் செய்வது சமூக சேவை அல்ல. சமூக சீரழிப்பையே அவர்கள் செய்கின்றனர். நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் ஒன்றுதான் என மக்கள் ஏன் கூறுகிறார்கள். இவ்வாறானவர்கள் அதிகமாக நாடாளுமன்றில் இருப்பதால்தான்.

இவ்வாறானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதில்லை என்று தீர்மானம் எடுத்துவிட்டார்கள். இவர்களிடம் பணம் இருக்கின்றது. சேர் என்று யாரும் அழைப்பதில்லை. அதற்காகத்தான் அவர்கள் நாடாளுமன்றம் வருகின்றார்கள்.

ஆனால், நாங்கள் நாடாளுமன்றம் வருவதற்கு முன்பே பொலிஸார் எங்களுக்குச் சலூட் அடித்துவிட்டார்கள். நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சலூட் அடித்துவிட்டுதான் நோயாளிகளை எங்களிடம் ஒப்படைப்பார்கள்.

இந்தச் சலூட்டுக்கு ஆசைப்பட்டு நான் நாடாளுமன்றம் வரவில்லை. இருந்த நல்ல தொழிலையும் விட்டுவிட்டு மக்கள் சேவை செய்வதற்காகவே நாடாளுமன்றம் வந்தேன்.

ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் பிரபலமாகவே உள்ளது. எனக்கு தினமும் புலனாய்வு அறிக்கை கிடைக்கின்றது. அதை வைத்தே இதைச் சொல்கின்றேன். ஜே.வி.பியும் முன்னிலையிலேயே உள்ளது.

நானோ அல்லது சம்பிக்க – குமார வெல்கமவோ எல்லோரும் பிரிந்து நின்றாலும் போராட்டத்தைத் தொடங்கியதும் ஒன்று சேர்வோம். நாங்கள் வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். சில விடயங்களில் ஒன்றுபடுகின்றோம். சில விடயங்களில் வேறுபடுகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *