
அண்மையில் பல்கலைகழக மாணவர்களை இராணுவ முகாமிற்கு அனுப்பி தலைமைத்துவ பயிற்சியளிக்க வேண்டுமென கம்பன் கழகத்தை சேர்ந்த இ.ஜெயராஜ் என்பவர் தெரிவித்த கருத்தை யாழ். பல்கலைகழக மாணவர்கள் வன்மையாக கண்டித்துள்ளதுடன், அதற்கு எதிராக போராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
இலங்கையில் குறிப்பாக இராணுவத்தினர் அரசியலில் தலையிடுவது மட்டுமல்லாமல், சிவில் சேவை, பல்கலைக்கழகங்களிலும் தலையிடுவதை எதிர்த்து பல்வேறு புத்திஜீவிகள், மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த கால கட்டத்தில், கம்பன் கழகத்தை சேர்ந்த இ.ஜெயராஜ் வெளியிட்டுள்ள கருத்தானது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அண்மையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழ ஆசிரியர் சங்கம் என்பன இராணுவத்தினர் கல்விச்செயற்பாடுகளில் தலையிடுவது தொடர்பில், பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இ.ஜெயராஜின் வெளியிட்ட கருத்தானது மீண்டும் இலங்கையில் இராணுவத்தினருக்கு துணைபோகுமாறு அமைந்துள்ளது.
உண்மையில் பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்கவேண்டும்.எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் செயற்பட வேண்டும்.
ஆனால் தற்போதைய காலங்களில் தலைமைத்துவமாக முன்னின்று செயற்படும் மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மறைமுகமாக அவர்களின் செயற்பாடுகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, அவர்களை பின்னடைவுக்கு கொண்டு செல்லும் நிலையில் காணப்படுகிறது.
அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் தலைமைத்துவத்தை ஏற்காமல் பின்னடைவதற்கு காரணம் என்ன என்பதை ஆராயாமல் கருத்து வெளியிட்டுள்ளமை மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அதிருப்தி அளிக்கின்றது.
2009 க்கு பிற்பாடு, ஒரு கல்வி சமூகம் தமது தலைமைத்துவம் உட்பட பல்வேறு விடயங்களில் பின்னடிப்பதற்கான காரணம் யாவரும் அறிந்ததொன்று.
இப்போதும் திட்டமிட்ட வகையில் மறைமுகமாக மாணவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுபவர்களை வெல்லவைக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் இது சம்பந்தமான கருத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.